Thursday, October 18, 2012

தலைக்கவசம்


மகளே!
பணி முடித்துப் பாதையிலேறும் ஒவ்வொரு நாளும், பாதுகாப்பினைக் கருதி அணியும் தலைக்கவசம், சட்டையில் பேனாவையும் செல்போனையும், பணத்தையும் மறக்காமல் எடுத்துவைப்பதுபோல் செய்ததின் விளைவு, மரணம் என்னை கொம்பாக்க வீதியில் வலப்புறத்திலிருந்து இடப்பக்கம் கடந்துபோன காரின் முன்னாலிருந்து மாயமாய் என் முன் சக்கரத்தில் உருண்டு பிறண்டு அலறி எழுந்து நாயாய் காணாமல் போனதுவரைதான் ஞாபகம். வண்டியிலிருந்து மெல்ல சாய்ந்தேன், மௌனமாக, வலப்புறமாக. கையை ஊன்றி காலைத் தேய்த்துக்கொண்டு கப்பிரோட்டில் தலைக்கவசத்திற்குள் இருந்து என் தலை, ஒரு பேரிடியை மரணத்தின் வாசற்திறப்பாய் ஒலித்து அடங்கியது. நொடிப்பொழுது கவன நிறுத்தம். என் ஆயுளின் முற்றுப்புள்ளி தோன்றி மறைந்த காலம். அப்போது யாரும் எனக்கு நினைவில்  இல்லை. என்னையே நான் மறந்துபோன கணம். வழியில் லிஃப்ட் கேட்ட பள்ளிச்சிறுவர்களும் விழுந்து எழுந்திரிச்சு என்னைத் தூக்கியிருக்கிறார்கள். நான் அந்த அமைதிக்காகக் காத்திருந்தவன்போல், அந்த நிசப்தத்தின் பொந்துக்குள் அடைந்துகொள்ள விழைந்தவன்போல், இந்த வாழ்க்கையில் அனுபவித்திராத ஒரு அற்புத உணர்வை அனுபவிப்பதுபோல் என்னை முழுமையாக ஒப்படைத்திருந்திருக்கிறேன். அப்போ கடவுள் தெரியவில்லை. கட்டிவளோ பெற்றவளோ நான் பெற்ற மக்களோ என் முன் தோன்றவில்லை. அவர்களைப் பற்றியான ஒரு குறிப்பையும் உணரவில்லை. உலகம் என்னைவிட்டு எங்கோ விடுபட்டு நின்று வேடிக்கைப் பார்ப்பதைப்போல, என்னைச் சுற்றியிருந்தவர்களின் அன்பான கண்களைக் காண்கிறேன். ஒரு வயோதிகத் தாய், ‘ஐயோ! புள்ள புள்ள” என வீட்டிற்குள் ஓடி ஒரு பரிசுத்தமான வெள்ளை பனியனைக் கொண்டுவருகிறாள். முகம்முழுக்க வீங்கிப்போய் இரவெல்லாம் குடிபோதையில் எங்கோ உருண்டுகிடந்தவனைப் போன்ற ஒரு முகம் என்னை அனுசரணையாக அணைத்து திருணையில் அமரவைக்கிறது. ஒருத்தன் செம்புத் தண்ணீரில் அந்தத் தாய் கொண்டுவந்த பனியனை நனைத்து என் எல்லா மூட்டுகளிலிலிருந்தும் சிராய்ப்பேறி வடியும் ரத்தத்தைத் துடைக்கிறார்கள். ஒவ்வொரு கண்களிலும் நான் அவர்களின் உறவாகத் தெரிகிறேன். நான் அவர்களின் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் அவர்கள் பயப்படும் ஒரு ஆபத்திலிருந்து மீண்டிருக்கிறேன்.  பள்ளிச் சிறுவர்கள், ”சார்... சார்... எங்களுக்கொன்னும் ஆவல சார்.... நாங்க போய்க்கிறோம். தண்ணீ குடிங்க சார்.... இந்தாங்க” ஒரு மிடர் நீர் உள்ளேசெல்கிறது. நான் வீடுபோகவேண்டும். “பரவாயில்லை... நான் பார்த்துக்கிறேன்” என்றபடி எழுகிறேன். வலி தெரியவில்லை. கண்முன் என் இரண்டு மகள்களும் பூவாய் மலர்கிறார்கள். வெகுநேரத்திற்குப் பிறகு, “நான் இறந்துவிட்டேனா...!” என்ற பயம் தொக்கி எழுந்தது. தொண்டையை அடைத்தது. மீண்டும் உட்கார்ந்துவிட்டேன். அந்தக் குடிகாரன், “சார்.. நா வேன்னா உன் வூட்ல உட்டு வரவாசார்!” அவனை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. அவன் தோலில் கைகளை ஊன்றிக்கொள்கிறேன். அவன் பார்வை என்னை ஆசுவாசப்படுத்துகிறது. அவன் என் எல்லா உறவுகளின் ஒட்டுமொத்தமாகத் தெரிகிறான். ஒருவேளை கடவுளாக இருப்பானோ! இருக்கலாம். எனக்குத் தெரிந்த கடவுள் பற்றியக் கதைகளில் வந்த கடவுள்களைப் போலத்தான் அவன் செயல்கள் இருந்தது. கடவுள் தான். “பரவாயில்லை... நான் வர்றேன்“
எல்லா சக்தியையும் கூட்டி, வேகமாக எழுந்து வண்டியைக் கிளப்பி, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டேன். சிறுவர்கள் என் பின்னே மறைந்துகொண்டே இருந்தார்கள், என் பக்கவாட்டுக் கண்ணாடியில். மற்றவர்களும்.
உடலெங்குமுள்ள மூட்டுகளில் ஈர பனியன் சுற்றப்பட்டு அதிலிருந்த ஈரம் வண்டியின் போக்கில் காற்றில் பட்டுக் காய்வதை உணர்ந்தேன். மெல்ல மெல்ல வலிகூடுவதையும். சமாளித்துக்கொண்டு சீரான வேகத்தில் விபத்தின் நினைவிலிருந்து மீளாமல், வீட்டின் திசையில் வண்டியை செலுத்தினேன்.
ரயில்வே கேட் கடந்ததும், மருந்தும் கட்டும், பிளாஸ்டரும் வாங்கிக்கொண்டு வீடுவந்து சேர்ந்தேன்.
மனைவியும் மகள் அரியநாச்சியும் ஒரு ரிதத்தில் படபடத்தார்கள். அழுதார்கள். தடுமாறினார்கள். புலம்பினார்கள். அவர்களுக்கு வார்த்தைக் குழறியது. நடை பின்னியது. அம்மா வந்தார். அவர்போக்கிற்கு ஒரு தடுமாற்றம். தம்பி வந்தான் காயங்களைப் பார்த்தான். காயங்களைத் துடைக்கும்போது அவன் விரல்கள் நடுங்கியது.... அப்புறம் சொந்த பந்தங்களின் தொலைபேசி நேர்காணல்கள். தொலைபேசியிலேயே அழுகையும், அறிவுரைகளும்.
எனக்கு வந்தக் குழப்பம் இதுதான்.
விபத்து இடத்தில் நான் சந்தித்த நபர்களின் செயல்பாடுகள்...., தானே வண்டியோட்டி, வீட்டிற்கு என் அடிபட்ட உடலைக் காண்பிக்கும்போது வினைபுரிந்த உறவுகள். இது  இரண்டின் போக்குதான் என்னை இன்னமும் விடாது யோசிக்கச் செய்கிறது.
நல்லவர்கள் கெட்டவர்கள் என்றோ, நிரந்தரம் தற்காலிகம் என்றோ இவர்களில் யாரையும் பிரித்துப்பார்க்காமல் இவர்களின் இந்தத் தன்மைக்கு எது பின்புலமாக இருக்கிறது. உறவின் அழுகையும், தடுமாற்றமும், வீதியில் காப்பாற்றியவர்களின் அக்கரையும் காப்பாற்றிய விதமும்.
காயம் ஆறட்டும் நிதானமாக யோசிக்கிறேன், மகளே!
இப்போதைக்கு இதுபோதும், வலிக்கிறது.

அரியநாச்சி
19.10.2012

Tuesday, April 3, 2012

மேடை ஆகச்சிறந்த ஓர் புதல்வனை இழந்துவிட்டது


மேடையில் இன்று இருள். முடிவுறா நாடகத்தின் முடிந்துபோன முந்தைய காட்சியில் பிரமாதமாக நடித்துப்பேர் வாங்கியவன் இடைவேளைக்கு வெளியேறினான். வெகு நேரமாகியும் காணவில்லை. உற்றார் உறவினர் அவன் தேவையை உணர்ந்து தேடிய பகுதிகளிலெல்லாம் அவன் நடித்துச் சென்ற காட்சிகளின் மேன்மை பாராட்டப்படுகிறது. அவன் எப்போவோ வாசித்த வார்த்தைகளின் அர்த்தங்கள் இப்போ புரியத் தொடங்குகிறது. வெகு தொலைவில் ஒரு புதரில் யாருமற்ற வனத்தில் சக்கரஉராய்வுகளைப் புதிதாக உணரும் மரஞ்செடிகளுக்குள் எதுவோடோ உடல் மறந்து கதைபேசும் மொழிபழகத் தொடங்கிவிட்டான். அவனை நடிக்க அழைப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவனது மேடைக்கு ஒளியின் தேவை இல்லை. எங்கும் எப்போதும் பிரகாசமாய், அவன் வாழ்ந்த காட்சிகளின் செரிமானங்கள் அவன் நகர்வின் அதிர்வாய் நம்முள் அன்பாய், அறிவாய், அறமாய்...... அருளாய்! கடவுளே உன் அரங்கில் அவனைப் பாதுகாப்பாக வைத்துக்கொள், வேலாயுதம் (நாடகத்துறை, புதுவை பல்கலைக்கழகம், புதுவை) மிகமிக மென் இதயம் கொண்டவன். அவன் கண்ட களம், மேடை, உறவு, பகிர்வு, பதிவு அனைத்திலிருந்தும் விடுபட்டபோதும் நினைவுகளைச் சுமந்தலையும் அவனோடு பழகிய அனைத்து உறவும் நட்பும்.